கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை கடுமையாகச் சாடியுள்ளார்.
“பிரதமர் மோடி அனைத்து மதத்தினரையும் மதிப்பவர் என்பதற்கு அவர் தேவாலயம் சென்றதே சாட்சி; ஆனால், முதல்வர் ஸ்டாலின் எப்போது இதுபோல இந்து கோயில்களுக்குச் செல்வார்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒரு மதத்திற்கு எதிராகப் பேசுவதை நிறுத்திவிட்டு அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய தமிழிசை, அரசியலில் தனி மரம் தோப்பாகாது என்பதை விஜய் உணர வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
“தம்பி விஜய் அவர்களே, தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது; திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமானால் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருப்பதாகவும், விஜய்யும் இதில் இணைந்தால் அது கூடுதல் பலமாக அமைந்து திமுகவை எளிதில் வீட்டுக்கு அனுப்ப உதவும் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
