
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இதற்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியின் மீது இந்தியாவை கொண்டுவர பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் 1938, 1948, 1965, 1968 ஆகிய ஆண்டுகளை நினைவுப்படுத்துகின்றது.
நூறு ஆண்டுகால வரலாறு தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகும். இந்திய எதிர்த்துப் போராடிய பெரியார் 3 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்ததும், சிறையிலேயே நான் மரணம் அடைந்து இருக்க வேண்டும், அதைப் பார்த்து என்னை போல் பல இளைஞர்கள் போராட முன் வந்திருப்பார்கள் என்ன கூறியிருந்தார். தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகம் மற்றும் போராட்டம் பற்றி தர்மேந்திர பிரதானுக்கு தெரியாது. மொழிக்காக தீக்குளித்து மாண்டவர்கள் உலகிலேயே தமிழர்கள் மட்டும்தான். மூன்று மாதத்திற்கு முன்பு இந்துத்துவாவ கும்பல் மாநாடு நடத்தி இனி இந்தியாவை பாரத் என்று தான் அழைக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். அரசியலமைப்பு சட்டத்தை தீயிட்டதை திராவிடர்கள் எப்போதும் மறந்து விட வேண்டாம். தொடர்ந்து இந்தி திணிப்பு நடைபெற்றால் மோடியின் காலத்திலேயே இந்தியா துண்டு துண்டாகும் என்பதை எச்சரிக்கிறேன் என்று வைகோ ஆவேசமாக பேசி உள்ளார்.