ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுக் தீர் சிங் ஜானாபுரியா செய்த செயல் தற்போது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிவாய் பகுதியில் உள்ள சீதாராம் ஜி கோவில் வளாகத்தில் ஏழைகளுக்குப் போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு பெண்ணுக்குப் போர்வையை வழங்கிய ஜானாபுரியா, அவரிடம் பெயரைப் கேட்டுள்ளார். அந்தப் பெண் தனது முஸ்லிம் பெயரைச் சொன்ன அடுத்த கணமே, “மோடியைத் திட்டுபவர்களுக்கு இந்தப் போர்வையைப் பெற எந்த உரிமையும் இல்லை” என்று கூறி, கொடுத்த போர்வையைப் பிடுங்கி அவரை அப்புறப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The ugly face of communal bigotry and anti-Muslim discrimination within the BJP. Former BJP MP Sukhbir Singh Jaunapuria, while distributing blankets, asked a poor woman her name. When she identified herself as a Muslim, Sukran Khan, He asked her to step aside and leave the… pic.twitter.com/JGkvgt8BJp
— Mohammed Zubair (@zoo_bear) February 23, 2026
இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சச்சின் பைலட் தனது எக்ஸ் தளத்தில், “வறிய நிலையில் உள்ள பெண்ணை அவமதிப்பது மிகவும் கீழ்த்தரமானது; இது மனிதாபிமானமற்ற செயல்” என்று பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோடாசராவும் பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலைச் சாடியுள்ளார். இதற்கிடையில், தனது செயலை நியாயப்படுத்தியுள்ள ஜானாபுரியா, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராகப் பேசுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த கரேடா புஜுர்க் கிராம மக்கள், முன்னாள் எம்பி-யின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
