சினிமா விமர்சனங்கள் குறித்த நடிகர் விஷால் கூறிய கருத்து தற்போது திரையுலகத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஒரு புதிய படம் திரையரங்குகளில் வெளியானவுடன், குறைந்தபட்சம் 12 காட்சிகளுக்கு விமர்சனங்களை வெளியிட வேண்டாம் என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் திரு பிஸ்மி, இந்த கருத்தை விரிவாக விமர்சித்து தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.

“விஷால் கூறும் கோணத்தில் பார்த்தால், சினிமாவை நேசிக்கும் ஒரு கலைஞரின் அக்கறையாக அதை காணலாம். ஆனால் ஒரே நேரத்தில், ஊடக விமர்சனங்களின் முக்கியத்துவம் மற்றும் பங்கு குறித்த புரிதல் திரையுலகில் இன்னும் இல்லை என்பதையும் இது காட்டுகிறது” என பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு ஊடக விமர்சனங்கள் அடித்தளம் வகித்துள்ளன. மணிரத்னம், சங்கர், பாலா, அமீர் போன்றோர் இன்று இயக்குநர்களாக உயர்ந்திருக்க காரணம் – ஊடகங்கள் மட்டுமே என அவர் வலியுறுத்தினார்.

பிஸ்மி தொடர்கிறார்: “விமர்சனங்கள் வசூலை பாதிக்கின்றன என்ற குற்றச்சாட்டு இன்று மட்டுமல்ல, 30 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கூறப்பட்டு வருவது. ஆனால் உண்மையில் மக்கள் ரசிக்கும் நல்ல படங்களுக்கு ஊடக விமர்சனங்கள் ஓர் உறுதுணையாக செயல்பட்டுள்ளன. சமுதாய ஊடகங்கள் இல்லாத காலங்களில் கூட, அச்சு ஊடக விமர்சனங்கள் ஒரு படம் வெற்றிபெற வேண்டிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.”

“இப்போது சில படங்கள் குறைந்த தரத்தில் தயாராகின்றன.`மொக்க படத்த எடுப்போம்; 3 நாள் கேப் விடுங்க காச புடுங்கிடுறோம், என்பது போல  அந்த படங்களை விமர்சனமின்றி மூன்று நாட்கள் பார்வையாளர்களின் பாக்கட்டில் இருந்து  காசு செலவழிக்க வேண்டும் என்பதே விஷால் போன்றோர்களின் நோக்கம் போல தெரிகிறது. இதுவே உண்மையான சுயநலமாகும். விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டுமெனும் பதிலாக, நல்ல படங்களை உருவாக்குங்கள் என்ற கோரிக்கை திரையுலகினரிடம் விடுக்கப்பட வேண்டும்” என பிஸ்மி தெளிவாக கூறினார்.

முடிவில் பிஸ்மி கூறியதாவது: “விஷால் கூறும் கருத்துக்கள், விமர்சனங்கள் குறித்து புரிதலின்றி கூறப்படுகின்றன. மக்கள் பாராட்டும் படங்களை எடுத்தால், விமர்சனங்கள் தானாகவே பாசிட்டிவாக வரும். எனவே விமர்சனங்களை தவிர்க்க சொல்லாமல், மக்கள் மனங்களை கவரும் படங்களை எடுக்க தயாரிப்பாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் நியாயமான வழி.” எனத் திடமாகக் கூறினார்.