ரஷ்யாவில் மைனஸ் 20 டிகிரி கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குப் போர்வை போர்த்திய டெலிவரி ஊழியரை, பிரபல பீட்சா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள ‘டோடோ பீட்சா’ (Dodo Pizza) என்ற உணவகத்தின் வாசலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு தெரு நாய் வசித்து வந்தது. ‘டோடோபோன்யா’ என்று பெயரிடப்பட்ட அந்த நாயை அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தங்களது செல்லப் பிராணி போலவே கவனித்து வந்தனர். கடை ஊழியர்கள் அதற்கு உணவு வழங்குவதோடு, இரவு நேரத்தில் கடும் குளிரிலிருந்து காக்க அதற்குப் போர்வையும் போர்த்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த கிளைக்கு ஜூலியா (32) என்ற புதிய மேலாளர் பொறுப்பேற்றார். அவர் வந்தவுடன், “இந்த நாய்க்கு யாரும் உணவு அளிக்கக்கூடாது, தங்குமிடம் தரக்கூடாது; மீறினால் அந்த நாயுடன் நீங்களும் தெருவுக்குப் போக வேண்டியிருக்கும்” என்று ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2026-ன் ஒரு நாள், மைனஸ் 20 டிகிரி குளிரில் பனியில் நனைந்தபடி அந்த நாய் நடுங்கிக் கொண்டிருப்பதை மிகைல் சாவிட்ஸ்கி என்ற டெலிவரி ஊழியர் பார்த்தார். மேலாளரின் தடையை மீறி, கருணையுடன் அந்த நாய்க்கு ஒரு போர்வையைப் போர்த்தினார்.

இது குறித்து மிகைல் கூறுகையில், “நான் நாய்க்குப் போர்வை போர்த்திவிட்டு, ஒரு டெலிவரியை முடித்துவிட்டு 15 நிமிடங்களில் கடைக்குத் திரும்பினேன். அதற்குள் நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மேலாளர் அறிவித்துவிட்டார்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கண்டனங்கள் குவிந்த நிலையில், டோடோ பீட்சா நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், “நாய் விவகாரத்திற்காக அவர் பணிநீக்கம் செய்யப்படவில்லை; அவர் அடிக்கடி வேலைக்குத் தாமதமாக வருவது மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காகவே நீக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், மேலாளர் ஜூலியா ஊழியர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், “நாய்க்கு உதவி செய்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளதை மிகைல் ஆதாரமாக வெளியிட்டுள்ளார். மேலும் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும், “ஒரு உயிரின் மீது காட்டிய கருணைக்காக வேலை பறிபோனது அநீதி” எனக் கூறி, அந்த நிறுவனத்திற்கு எதிராக இணையதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.