மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்ற பாஜக அரசு முயற்சிப்பதாகப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இப்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா உண்மையான மகளிர் இடஒதுக்கீட்டுக்கானது அல்ல என்றும், 2023-லேயே அது குறித்த தெளிவு வந்துவிட்ட நிலையில் இப்போது புதிய நாடகத்தை பாஜக ஆடுவதாக அவர் சாடினார். இந்த மசோதாவின் உண்மையான நோக்கம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது அல்ல, மாறாகப் பலரது உரிமைகளைப் பறிப்பதுதான் என அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

​குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்கே இந்தத் தொகுதி மறுசீரமைப்புச் சதி நடப்பதாக ராகுல் காந்தி எச்சரித்தார். பாஜகவின் இந்தத் திட்டங்கள் மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் அவர் பேசியது நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் இந்தப் பேச்சு தற்போது இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.