உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில், ஒரே பெண்ணைத் திருமணம் செய்ய இரண்டு மாப்பிள்ளைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, மொராதாபாத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவருடன் முதலில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாக அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், நிச்சயிக்கப்பட்ட தேதியன்று இரண்டு மாப்பிள்ளைகளும் தங்கள் வீட்டார் மற்றும் உறவினர்களுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்ததால் அங்கு குழப்பம் நிலவியது.

மேலும் தங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கே பெண்ணைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இறுதியில், மணப்பெண் வீட்டார் தாங்கள் இரண்டாவதாக நிச்சயம் செய்த சம்பல் மாவட்ட இளைஞருக்கே பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தனர். போலீசாரின் அறிவுறுத்தலின்படி முதலாமவர் தரப்பினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதையடுத்து, திட்டமிட்டபடி சம்பல் மாவட்ட மணமகனுடன் திருமணம் சுமுகமாக நடந்து முடிந்தது. இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.