ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொழும்புவில் நடைபெறவிருந்த லீக் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் பலத்த மழையால் ரத்து செய்யப்பட்டது. களத்தில் இறங்காமலேயே பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக லேசான தூறல் இருந்த நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் கவாஜா நபாய்க்கு பதிலாக ஃபகார் ஜமான் சேர்க்கப்பட்டார். இருப்பினும், ஆட்டம் தொடங்கவிருந்த நேரத்தில் மழை தீவிரமடைந்ததால், நீண்ட காத்திருப்புக்குப் பின் நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மழை இடைவேளையின் போது, பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம், தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோருடன் அமர்ந்து தேநீர் அருந்தும் காட்சிகள் கேமராவில் பதிவாகின. தேநீர் மட்டுமின்றி பழங்கள் அடங்கிய தட்டையும் அவர் வைத்திருந்தார். மழையை வேடிக்கை பார்த்தபடி அவர் உற்சாகமாக உரையாடிக்கொண்டிருந்த இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் கடந்த வியாழக்கிழமை (பிப். 19) தொடங்கியது. ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் மறையும் வரை நோன்பு நோற்பது வழக்கம். பாபர் அசாம் மாலை வேளையில் தனது நோன்பைத் துறந்தபோது (இப்தார்) இந்தத் தேநீர் மற்றும் பழங்களை உட்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், பாபர் அசாம் தேநீர் அருந்தும் இந்தப் புகைப் படங்களை வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.