இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங், சமீபத்தில் ராஜ் ஷமானி உடனான நேர்காணலில் விராட் கோலி தமக்கு பேட் பரிசளித்தபோது நடந்த சுவாரசியமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
“விராட் பையா எனக்கு ஒரு புதிய பேட் கொடுத்திருந்தார். ஆனால், வலைப் பயிற்சியின் போது சுழற்பந்து வீச்சாளரின் பந்தை எதிர்கொண்டபோது அந்த பேட் எதிர்பாராதவிதமாக உடைந்துவிட்டது. அதைக் கேள்விப்பட்டால் பையா என்ன சொல்வாரோ என்று பயந்துபோய் நின்றேன்” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
பின்னர் கோலியைச் சந்தித்தபோது, பழைய பேட் எங்கே எனக் கேட்டதற்கு, ஸ்பின்னரிடம் அந்த பேட் உடைந்துவிட்ட உண்மையை ரிங்கு சிங் தயக்கத்துடன் கூறியுள்ளார்.
“ஸ்பின்னரிடமா என் பேட்டை உடைத்தாய்?” என விராட் கோலி ஆச்சரியத்துடன் கேட்டாலும், அடுத்த கணமே தனது பையிலிருந்து மற்றொரு புதிய பேட்டை எடுத்து ரிங்கு சிங்கிற்குப் பரிசாக அளித்துள்ளார். ஏற்கனவே ஒரு பேட் உடைந்த நிலையில், மீண்டும் கோலி தமக்கு மற்றொன்றைக் கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என ரிங்கு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சீனியர் வீரரான விராட் கோலி, இளம் வீரர்களை எப்படி ஊக்குவிக்கிறார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
