பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் பேட்டிங் வரிசையில் அதிரடியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் விளக்கமளித்துள்ளார். பாபரின் மெதுவான ரன் குவிப்பு விகிதமே (Strike Rate) இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நமீபியாவுக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் பாபர் அசாம் தொடக்க வீரராகக் களமிறங்காமல், பேட்டிங் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பிஎஸ்எல் (PSL), எல்பிஎல் (LPL) மற்றும் பிக் பேஷ் போன்ற பெரிய தொடர்களில் பாபர் எப்போதும் தொடக்க வீரராகவே விளையாடி வந்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மைக் ஹெசன் கூறியதாவது, ஸ உலகக்கோப்பை போன்ற தொடர்களில், பவர்-பிளே ஓவர்களில் பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் 100-க்கும் குறைவாகவே உள்ளது. அணியின் தற்போதைய தேவைக்கு இது போதுமானதாக இல்லை.

கஆசியக் கோப்பைக்குப் பிறகு பாபரை ஒரு குறிப்பிட்ட பொறுப்பிற்காகவே அணியில் மீண்டும் சேர்த்தோம். மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்தால், அதைச் சீர் செய்து விளையாடும் திறன் அவருக்கு உண்டு. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் நிலைத்து நின்ற பிறகு தனது ரன் வேகத்தை அதிகரித்ததை நாம் பார்த்தோம்.

ஆட்டத்தின் 12-வது ஓவருக்குப் பிறகு தேவைப்படும் அதிரடி ஆட்டத்திற்குப் பாபர் அசாம் பொருத்தமானவர் அல்ல. இந்தச் சூழல்களைப் பாபரும் நன்கு உணர்ந்துள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர்-8 சுற்று ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டபோது, பாபர் அசாம் தேநீர் அருந்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது