சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகப் பலரும் விசித்திரமான காரியங்களைச் செய்து வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் வெள்ளரிக்காய் தோலை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு சருமப் பராமரிப்பு செய்த வீடியோ இணையவாசிகளைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஃபேஷன் மற்றும் அழகு குறிப்புகளை வழங்கும் ‘இன்புளுயன்சர்கள்’ அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், @dewy.skin.tannu என்ற கணக்கில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மீது வைப்பது வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் உள்ள இளம்பெண், வெள்ளரிக்காயின் தோலை நீளமான சீவி, அதனை முகம், கழுத்து மற்றும் உடல் முழுவதும் கட்டுப்போடுவது போலச் சுற்றிக்கொண்டுள்ளார்.

 

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேடம், நீங்கள் எந்தக் கிரகத்திலிருந்து வந்தீர்கள்? என ஒருவர் கிண்டலாகக் கேட்டுள்ளார். எங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு தோல் இருக்கிறது, அதை வைத்து இப்படிச் செய்யலாமா? என மற்றொருவர் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இது ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு போல இருக்கிறது என ஒரு பயனர் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

மேலும் அழகு பராமரிப்பு என்ற பெயரில் இத்தகைய விசித்திரமான முறைகளைப் பின்பற்றுவது தேவையற்றது என்றும், இது போன்ற வீடியோக்கள் வெறும் விளம்பரத்திற்காகவே செய்யப்படுகின்றன என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான லைக்குகளைக் குவித்து இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.