கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவர் நிதின் ராஜ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் இறப்பதற்கு முன்னதாக தனது வகுப்புத் தோழர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குரல் பதிவு, ஆசிரியர்களின் எல்லையற்ற கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. தனது இறுதிச் செய்தியில் நிதின் ராஜ் உருக்கமாகக் குறிப்பிட்டிருப்பதாவது,

ஆசிரியர்களின் அவமானங்களை நான் ஒரு கட்டம் வரை பொறுத்துக் கொண்டேன். ஆனால், வகுப்பறையில் என்னை எழுப்பி நிற்கவற்று , சமீபத்தில் எனது தாய்க்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து ஆசிரியர் கிண்டல் செய்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், எனது விடைத்தாளில் 3 மதிப்பெண்களைக் குறைத்துவிட்டதாகவும், இதைக் காட்டி உன் பெற்றோருக்கு ‘அதிர்ச்சி’ கொடு என்றும் அவர் ஏளனமாகப் பேசினார்.

நிதின் ராஜ் தனது பதிவில் மேலும் கூறுகையில், ஆசிரியர் அறைக்கு (Staff Room) நான் சென்றபோது, எந்தக் காரணமும் இன்றி என்னை அவர் ‘முட்டாள்’ என்று திட்டினார். நான் பதிலுக்கு ‘உங்களுக்கும் அது பொருந்தும்’ என்று சொன்னேன். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து என்னைத் தாக்கினர். ‘கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே சென்றால் உனது கை, கால்களை வெட்டிவிடுவோம்’ என்று மிரட்டினர். அங்கிருந்த சங்கீதா மேடம் எதையும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆசிரியர்களை எதிர்த்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததில்லை என்றும், ஆனால் அவர்களின் அத்துமீறல்களே தன்னை இந்த நிலைக்குத் தள்ளியதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.