மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது, தமிழகத்தின் காவிரி உரிமையை மழுங்கடிக்கும் செயல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கும், சுமார் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் உயிர்நாடியாக உள்ளது.
இந்த சூழலில், கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டத் துணிவது டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் என்றும், இத்தகைய அச்சுறுத்தலான செயல்பாடுகளை தமிழக அரசு மௌனமாக வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள அரசு காங்கிரஸ் கட்சியின் தயவில் இயங்கும் ஒரு ‘பொய்க்கால் குதிரை’ அரசு என்று சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த துணிச்சலுக்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவின் இந்த சதித் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உடனடியாகத் தனது தெளிவான மற்றும் திடமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும், காவிரி உரிமையை விட்டுக் கொடுக்காமல் கர்நாடகத்திற்கு எதிரான சட்ட ரீதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
