திமுக முன்னணி தலைவரான ஆ.ராசா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு கட்சித் தலைவரைத் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர் எந்தவொரு அரசியல் விவாதத்தின்போதும் பெண்களையோ அல்லது தலைவர்களையோ இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்கள் ஆ.ராசாவின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை சாதி, மத மற்றும் பண அரசியலைத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தோல்வியின் காரணத்தை இன்னும் கண்டறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் திமுக, இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதை விடுத்து, தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பெரியார், அண்ணா மற்றும் அம்பேத்கர் கொள்கைகளின் வழியில் தவெக அரசு பயணிக்கும் என்றும், மக்கள் சாதி கடந்து அளித்த ஆதரவே இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.