சீனாவைச் சேர்ந்த லீ சூஃபான் என்ற பெண், “மனவிருப்பத்தை நிறைவேற்றும் மேஜிக் மெழுகுவர்த்திகளை” விற்று சுமார் 63 கோடி ரூபாய் (50 மில்லியன் யுவான்) வரை மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டு புகழ்பெற்ற இவர், சீனா திரும்பியதும் தனது சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் மெழுகுவர்த்திகள் பிரிந்த காதலர்களைச் சேர்த்து வைக்கும், செல்வத்தைக் கொடுக்கும், வேலையில் முன்னேற்றம் தரும் என நம்பவைத்து, ஒரு மெழுகுவர்த்தியை 38 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விற்றுள்ளார்.

​தனது பிசினஸை விரிவுபடுத்த ஒரு டீமையே நியமித்து வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் ஜாதகப் பயிற்சிகளை வழங்கிய லீ, பலரை ஏமாற்றியுள்ளார். ஒரு வாடிக்கையாளர் தனது கடைக்கு லாபம் வரவில்லை என்று அளித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில் லீயின் 63 கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. சீன சட்டப்படி இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் சில தளங்களில் இந்த மெழுகுவர்த்தி விற்பனை லிங்குகள் உலவுவது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.