சென்னை மெரினா கடற்கரையில் அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகை ஜூலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் அவர் பதாகைகளை ஏந்தியிருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அறியப்பட்டவர் ஜூலி. இவர் சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எதிராகத் தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வருகிறார். இதற்குத் த.வெ.க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த ஜூலி, அங்கேயும் விஜய்யை விமர்சித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று மெரினா கடற்கரை அவ்வையார் சிலை பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் ஜூலி திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கையில் “தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்” என்ற பதாகையையும், மறு கையில் த.வெ.க-வுக்கு எதிரான பதாகையையும் அவர் ஏந்தியிருந்தார். அந்தப் பதாகையில் அணில் படம் பொறிக்கப்பட்டு அதன் மீது ‘X’ குறியீடு இடப்பட்டிருந்தது. மேலும், “பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு இல்லை” என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது.

இது குறித்துத் தகவல் அறிந்த மெரினா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜூலி உள்ளிட்ட 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும்  பொது இடத்தில் அனுமதியின்றிப் போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும், தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஜூலியிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டு பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், அனுமதியின்றிப் பிரச்சாரம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜூலி உட்பட 4 பேர் மீது மெரினா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.