சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, சாலைப் பாதுகாப்பு மற்றும் குடிமை உணர்வு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பள்ளிப் பேருந்து குழந்தைகளை இறக்கிவிடுவதற்காகச் சாலையோரம் நிற்கிறது. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவசரப்பட்டு ஹாரன் அடிப்பதோ அல்லது முந்திச் செல்ல முயல்வதோ வழக்கம்.

ஆனால், இந்த வீடியோவில் எந்தவிதமான போக்குவரத்து போலீசாரோ அல்லது சிக்னலோ இல்லாத நிலையிலும், பின்னால் வந்த அனைத்து கார்களும் வரிசையாக நின்று குழந்தைகளுக்கு வழிவிடுகின்றன.

குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து, அவர்கள் அனைவரும் சாலையைக் கடக்கும் வரை வாகன ஓட்டிகள் பொறுமையுடன் காத்திருப்பது பலரின் இதயங்களை வென்றுள்ளது.

ட்விட்டரில் (X) பகிரப்பட்ட இந்த 34 வினாடி வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துப் பாராட்டி வருகின்றனர். “நமது நாடும் இதுபோன்ற ஒழுக்கமான நிலையை அடைய வேண்டும்” என்ற ஆதங்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

“>

 

இதைப் பார்த்த பயனர்கள் பலர், “லண்டன் போன்ற மேலைநாடுகளில் மட்டுமே சாத்தியமான இந்த ஒழுக்கம், நம் நாட்டிலும் வர வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். சட்டத்திற்காகவோ அல்லது அபராதத்திற்காகவோ அல்லாமல், சக மனிதர்கள் மற்றும் குழந்தைகளின் மீதான அக்கறையோடு செயல்படுவதே உண்மையான குடிமை உணர்வு என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.