எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசை அனுபவமின்மை மற்றும் சினிமா கவர்ச்சி அரசியல் என்று கூறி மிகக் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார். தமிழ்நாடு இன்று கல்வி, மருத்துவம், தொழில்துறை எனப் பல துறைகளில் இந்தியாவிலேயே உயர்ந்த நிலையில் இருப்பதற்கு அண்ணா திமுகவின் 31 ஆண்டுகால பொற்கால ஆட்சிதான் மிக முக்கியக் காரணம் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் கிருஷி கர்மான் விருது உட்படப் பல சாதனைகளைச் செய்துள்ளோம் என்று பட்டியலிட்ட அவர், நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் ஓட்டுக் கேட்கும் தகுதி தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அதிரடியாகப் பேசினார். மேலும், முதலமைச்சர் விஜய்யை நேரடியாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது, இந்த நாட்டு மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்?” என்று மேடையிலேயே அதிரடிக் கேள்வி எழுப்பினார்.
விஜய் மக்களுக்குச் சேவை செய்து வெற்றி பெறவில்லை என்றும், திரைப்படங்களின் மூலமாகத் திரையில் தோன்றி நடித்து, அந்த சினிமா கவர்ச்சியைக் காட்டித்தான் இன்றைக்குத் தட்டுத்தடுமாறி முதலமைச்சராகி இருக்கிறார் என்றும் மிகக் காட்டமாக விமர்சித்தார். சினிமா கவர்ச்சியால் வந்த வெற்றி இது என்பதை விஜய் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விடுத்த இந்த நேரடி அட்டாக் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
