தமிழ்நாடு அரசியலில் அண்ணாமலை தொடங்கியுள்ள “We The Leaders” இயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான வன்னி அரசு மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விழுப்புரம் திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (ஜூன் 6) திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வன்னி அரசு, அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டில் பாஜகவின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் மக்களிடம் முற்றிலும் எடுபடவில்லை என்றும், அதனால் தான் தற்போது அண்ணாமலையை வைத்து ஒரு புதிய அரசியல் நாடகத்தை டெல்லி தலைமை அரங்கேற்றி வருகிறது என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ​அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி என்பது அப்பட்டமான பாஜகவின் மறுவேடமே தவிர வேறொன்றும் இல்லை என்று அமைச்சர் வன்னி அரசு சாடியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் மறைமுக செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் எப்படியாவது திணிப்பதற்காகவே அண்ணாமலை இந்த மாறுவேட அரசியல் நாடகத்தை நடத்துகிறார் என்றும், அவரது புதிய கட்சி என்பது பாஜகவின் முழு ஆசிர்வாதத்துடன் செயல்படும் இன்னொரு முகம் என்றும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார். அண்ணாமலையின் பின்னால் இருக்கும் இந்த ரகசியத்தை உணர்ந்து கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்கள், இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஒருபோதும் விழ மாட்டார்கள் என்றும் வன்னி அரசு பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.