மும்பையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கு நீண்ட நாட்களாகத் தொடர் சளியும், அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டு வந்துள்ளது. சாதாரணப் பாதிப்பு என்று நினைத்து ஆரம்பத்தில் இதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைகளின் முடிவில் அச்சிறுவனுக்கு மூக்கின் பின்புறப் பகுதியில் உருவாகும் ‘நாசோபார்ஞ்சியல் கார்சினோமா’ என்ற அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தத் தகவல் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நவிமும்பையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அச்சிறுவன் உயர்தர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அப்போலோ மருத்துவமனையின் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர், அச்சிறுவனுக்கு கீமோதெரபி மற்றும் கதிரியக்கச் சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் தீவிரமாக வழங்கினர்.
மருத்துவர்களின் தொடர் முயற்சியின் பயனாக, தற்போதைய மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் முடிவுகளில் அச்சிறுவனின் உடலில் புற்றுநோய் பாதிப்பு முற்றிலும் நீங்கி, அவன் முழுமையாகக் குணமடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. தற்போது அந்த 17 வயது சிறுவன் எவ்விதப் பாதிப்பும் இன்றி, சீரான ஆரோக்கியத்துடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள மருத்துவர்கள், ஆரம்பக்கட்ட அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது முக்கியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
