டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரின் உரையை முன்வைத்து, உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நமது கழக அரசின் சாதனைகளின் மீது சோஃபா மாடல் அரசு முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என அவர் பகிரங்கமாக சாடியுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்துவிட்டது போலவும், ஒட்டுமொத்த மாநிலமும் கடனில் தத்தளிப்பதாகவும் பொய்களைக் கொண்டு சித்தரித்த இன்றைய முதலமைச்சர், தற்போது டெல்லியில் போய் தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்துவிட்டு வந்திருக்கிறார் என அனல் பறக்கும் விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார்.

​தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நாட்டிலேயே தமிழ்நாடு தான் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்றும், மகளிர் கல்வி, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் டெல்லி கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்று தமிழ்நாட்டைப் பற்றி அவதூறுகளைப் பரப்பியவர்களே, இன்று டெல்லிக்குச் சென்று தமிழ்நாட்டின் அசுர வளர்ச்சியைப் பெருமையுடன் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சோஃபா மாடல் அரசை வச்சு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடி அரசியல் விமர்சனம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சமூக வலைத்தளங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.