மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழகத்தில் முருக பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் நம்பப்படும் முக்கிய ஆறுபடை வீடுகளில் முதல் இடம் பெறும் கோயிலாகும். இந்த கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) வருகிற ஜூலை 14ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவை முன்னிட்டு, பிரபல திரைப்பட நடிகர் சூரி, வீடியோவொன்றை வெளியிட்டு பக்தர்களுக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார். “மதுரை மண்ணில் நம்ம முருகப்பெருமனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் குடமுழுக்கில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற வர வேண்டும்,” என்று அவர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் வளாகம் முழுவதும் ஒலி, ஒளி அலங்காரங்களுடன் புத்துணர்வை பெற்றுள்ளது. சமய வழிபாடுகள், ஹோமங்கள், வேத பாராயணங்கள் என ஆன்மீக வாசனையோடு நடைபெற இருக்கும் இந்த விழா, பக்தர்களின் வாழ்க்கையில் நன்மை மற்றும் ஆனந்தம் பொங்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.