கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 189 பேர் உயிரிழந்து, 824 பேர் காயமடைந்திருந்தனர். நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் ‘7/11 குண்டுவெடிப்பு’ என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில், 2015-ஆம் ஆண்டு சிறப்பு மும்பை நீதிமன்றம், 5 பேருக்கு மரணதண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. அதே நேரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து, அப்துல் வாஹித் என்பவரை விடுவித்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம், மும்பை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது” எனக் கூறி, அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தனர். இந்த தீர்ப்பு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பத்தினருக்கும், 2015-ல் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.
விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் தற்போது, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “2006-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து 2015-ம் ஆண்டு விடுவிக்கப்படும் வரை நான் 9 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீஸ் காவலில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. இதில் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த தவறான கைது எனது கல்வி, தொழில், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது. எனவே ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனது “மறுவாழ்வுக்கான வழி அமைக்க” அரசும், மானில மனித உரிமை ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அப்துல் வாஹித், 2006-ல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டவர். கடந்த 2015-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து விடுவித்தது. 9 ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் போலீசாரின் சித்திரவதைகள், அவரது வாழ்வில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தியதாக கூறுகிறார்.
