பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் வசதியாக இருப்பதால் அதையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக ரயிலில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயிலின் முன்பதிவு செய்தால் படுத்துக்கொண்டே பயணிக்க முடியும். அதற்கு முன்பதிவு செய்வதும் எளிது. ஆனால் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் போது பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்து விடுகிறார்கள். ஆனால் அந்த முன்பதிவு டிக்கெட்டில் வேறு நபர் பயணிக்க முடியும் அதற்கான வழிமுறையும் ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது.

இது பலருக்கும் தெரிவதில்லை. முன்பதிவு டிக்கெட்டை மற்றவர் பெயருக்கு எப்படி மாற்றுவது அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் முன்பதிவு செய்த நபர் அந்த தேதியில் பயணிக்க முடியாவிட்டால் அவரின் ரத்த சொந்த உறவினரின் பெயரை மாற்றி அதே தேதியில் பயணிக்கலாம்.

அதாவது முன்பதிவு செய்த நபரின் டிக்கெட்டில் பெயரை மாற்றி தாய், தந்தை, தங்கை, தம்பி, அண்ணன், அக்கா, மனைவி, குழந்தை போன்ற ரத்த சொந்த உறவில் யாராவது பயணம் செய்யலாம்.  அதற்கு பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்த நபர் அந்த டிக்கெட் நபர் ஏன் பயணம் செய்யவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு ஆதார் நகலோடு கடிதம் கொடுக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு கண்காணிப்பாளர் அவர் பெயரை மாற்றிக் கொடுப்பதன் மூலம் பயணம் செய்யலாம்.