திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாகுளம் கிராமத்தில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி பேபி சரோஜா என்ற மனைவியும், ராஜன் மற்றும் ராஜேந்திரன் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் இராணுவத்தில் பணியாற்றிய நிலையில் ஓய்வு பெற்றுவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ராஜேந்திரன் சென்னையில் வேலை முடிந்த பிறகு இருசக்கர வாகனத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டவுடன் அவருடைய தாயார் சரோஜா மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இவருக்கு 80 வயது ஆகிறது. மேலும் மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.