
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து, சுப்பிரமணியின் கழுத்தில் பிளேடால் அறுக்க முயன்றார்.
இதனை பார்த்த ஜெயலட்சுமி சத்தமிட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அதற்குள் பொதுமக்கள் திருடனை விரட்டி பிடித்து கட்டிப் போட்டு, தர்மஅடி கொடுத்தனர். பின்னர் வாலிபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் உயிரிழந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராபி ஓரான் (வயது 28) என அடையாளம் காணப்பட்டது. குற்றவாளியின் உடல் மயணப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஈரோடு தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு, இது கொலை முயற்சி மற்றும் மரணம் வழக்காக பதிந்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சுப்பிரமணிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. வயதான தம்பதிக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.