அதிமுக-விலிருந்து பிரிந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார்.

இதற்கு ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பதிலளித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், “யார் எந்தக் கட்சிக்கு வருகிறார்கள் என்பது வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தெரியும்” என சவால் விடுத்துள்ளார். எந்தக் கட்சியாக இருந்தாலும் முதலில் வேட்பாளர்களை அறிவிக்கட்டும், அப்போது எத்தனை பேர் தவெக-வை நோக்கி வருகிறார்கள் என்பதைப் பார்த்து வேலுமணி தெரிந்து கொள்ளட்டும் என அவர் சாடினார்.

மேலும், 50 ஆண்டுகால அதிமுக பயணத்தில் தனக்குக் கிடைத்த மரியாதையை விட, தவெக-வில் தனக்கு அளிக்கப்படும் கௌரவம் அனைவரும் அறிந்தது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக-வில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததே தனது விலகலுக்குக் காரணம் என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார்.