தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவாக, வரும் பொங்கலுக்கு ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கேற்ப, 2.22 கோடி குடும்பங்களுக்குத் தேவையான பச்சரிசி மற்றும் சர்க்கரை ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
மேலும், பொங்கல் தொகுப்போடு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் 85 சதவீதப் பொருட்கள் ஏற்கனவே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரொக்கப் பணம் மற்றும் கரும்பு கொள்முதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டவுடன், ஜனவரி 10-ம் தேதிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும், மக்களுக்குப் பொங்கல் சந்தோஷத்தைக் கொடுக்க அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.
