மெல்போர்னில் நடந்து வந்த வருடத்தின் முதல் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் இன்றுடன் முடிவடைந்துள்ளது. பல முன்னணி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஜானிக் சின்னர் என்ற வீரர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ் மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களில் ரஷ்ய வீரர் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து அடுத்த மூன்று செட்களை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் கைப்பற்றினார். அதன்படி 3 – 6, 3 – 6, 6 – 4, 6 – 4, 6 – 3 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரரை வீழ்த்தி இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.