தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், திரைப்படத் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகனுக்கு எதிராக நடிகர் விஷால் அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு நடிகர் அருண் விஜய் தற்பொழுது அதிரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்துள்ள பதிலடி கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறை சார்ந்த எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத ஒருவருக்கு இந்தத் துறையை ஒதுக்கியிருப்பது வருத்தமளிப்பதாக விஷால் விமர்சித்திருந்த சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அருண் விஜய், “மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்; அதை விடுத்து தவெக அரசின் முடிவுகளில் தயவுசெய்து தலையிடாதீர்கள்” என்று காரசாரமாகச் சாடியுள்ளார்.

மேலும், “அமைச்சர் ராஜ்மோகன் இந்தத் துறையைச் சேர்ந்தவர் என்பதால் நமது திரையுலகப் பிரச்சனைகள் அவருக்கு நன்றாகவே தெரியும், அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; எனவே அவரது முடிவுகளை மதித்து, ஒருவரது செயல்பாடுகளைப் பார்ப்பதற்கு முன்பே அவரைப் பற்றி அவசரப்பட்டு எந்தவொரு தவறான முடிவுக்கும் வர வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்” என பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஆதரவாகவும், விஷாலுக்கு ‘நோஸ்கட்’ செய்யும் வகையிலும் அருண் விஜய் வாரி வழங்கியுள்ள இந்த அட்வைஸ் பேட்டி, தற்போது சோசியல் மீடியாக்களில் செம்ம ட்ரெண்டாகி விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.