தமிழகத்தில் தேர்தல் காலங்களில் “ஐந்து சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி” என்பது கவர்ச்சிகரமான வாக்குறுதியாக இருந்தாலும், இனிவரும் காலங்களில் எந்த அரசாலும் இதைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு 5 சவரன் வரையிலான கடன்களைத் தள்ளுபடி செய்தபோது, அரசுக்கு சுமார் ₹6,000 கோடி செலவானது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால், 5 சவரன் நகைக்கான கடன் மதிப்பு தலா 2.5 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதனால் தற்போதைய சூழலில் மீண்டும் தள்ளுபடி அறிவித்தால், அரசு சுமார் ₹25,000 கோடிக்கும் மேல் நிதிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். ஏற்கனவே கடன் நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசால் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க முடியாது.
நிதிப் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, தொழில்நுட்ப வளர்ச்சியும் முறைகேடுகளைத் தடுத்துள்ளது. முன்பு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் தலா 5 சவரன் வைத்து கடன் தள்ளுபடி பெற்றனர். ஆனால் இப்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் அனைத்து வங்கிக் கணக்குகளுடனும் இணைக்கப்பட்டு, முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ஒரே நபர் பல இடங்களில் பலன் பெறுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தள்ளுபடி அறிவிக்கப்பட்ட போதே, நிபந்தனைகள் காரணமாக சுமார் 25 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டனர். புள்ளிவிவரங்கள் அனைத்தும் விரல் நுனியில் இருப்பதால், அரசு இனி மிகக் கடுமையான தணிக்கையை மட்டுமே மேற்கொள்ளும்.
கூட்டுறவு வங்கிகளின் வாழ்வாதாரமும் இதில் பெரும் சிக்கலில் உள்ளது. அரசு தள்ளுபடி செய்யும் தொகையை வங்கிகளுக்கு வழங்கப் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்வதால், வங்கிகளிடம் போதிய சுழற்சி நிதி இல்லாமல் போகிறது. இதனால் வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கு வட்டி கொடுக்கக் கூடப் பல சங்கங்கள் திணறி வருகின்றன.
மீண்டும் ஒரு பெரியதள்ளுபடி அறிவிக்கப்பட்டு, அந்தத் தொகையை அரசு உடனடியாக வழங்கத் தவறினால், கூட்டுறவு வங்கிகள் மொத்தமாகத் திவாலாகும் அபாயம் உள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் குறைந்த வட்டியில் கடன் பெறுவதை மக்கள் எதிர்பார்க்கலாமே தவிர, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்பதே கசப்பான அரசியல் உண்மை.
