காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட கடைசிப் பணயக்கைதியான ரான் ஜவிலி என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது 251 பேர் கடத்தப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகால தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது வட காசாவிலுள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் இருந்து ரானின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து பணயக்கைதிகளும் மீட்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நிகழ்வு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். கடைசிப் பணயக்கைதியின் உடல் மீட்கப்பட்டிருப்பது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நிலவி வரும் போரில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

தற்போது முதற்கட்ட போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த முன்னேற்றம் இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வலுவான பாதையை வகுத்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்துப் பணயக்கைதிகளும் மீட்கப்பட்டுவிட்டதால், வரும் நாட்களில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும் என்றும், இது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.