அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு பல நிபந்தனைகளை விதித்திருந்த டிரம்ப், தற்போது தனது நிலையில் இருந்து சற்று பின்வாங்கியுள்ளது போல தெரிகிறது.
ஈரானின் புதிய அதிபர் முந்தையவரை விட புத்திசாலியாக இருப்பதாகவும், அவர் போர் நிறுத்தத்திற்கு முயற்சிப்பதாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார். அதே சமயம், ஈரான் போர் நிறுத்தத்திற்காகக் கெஞ்சுவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மட்டுமே சமாதானத்திற்கு ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஈரான் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்கள் போர் நீடித்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்று கூறியுள்ள ஈரான், அமெரிக்காவின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானைக் கற்காலத்திற்குத் தள்ளுவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
