கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் குழிமந்தி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட நிலையில் அதனுடன் வழங்கப்பட்ட மயோனைசை‌ சாப்பிட்டது தான் உடல்நல குறைவுக்கு காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரியாணி சாப்பிட்ட உசைபா (56) என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு பிரியாணி சாப்பிட்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.