ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம், எதிர்பாராத விதமாக இந்தியாவில் காண்டம் விலையை 50 சதவீதம் வரை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. காண்டம் தயாரிப்பதற்குத் தேவையான இயற்கை லேடெக்ஸ், அமோனியா, சிலிகான் ஆயில் உள்ளிட்ட 6 முக்கிய மூலப்பொருட்களின் சப்ளை, போர் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா தனது தேவையில் 86 சதவீத அமோனியாவை சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. தற்போது போர் சூழலால் கடல் வழி போக்குவரத்து முடங்கியுள்ளதால், மேன்ஃபோர்ஸ் (Manforce) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மூலப்பொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.

​இந்த விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, வரும் நாட்களில் சந்தையில் முன்னணி பிராண்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. காண்டம் விலை அதிகரித்தால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் அதன் பயன்பாட்டைக் குறைக்க நேரிடும் என்றும், இதனால் தேவையற்ற கருத்தரிப்பு மற்றும் பால்வினை நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்கும் இது பெரும் சவாலாக அமையும் எனத் தெரிகிறது. தற்போது முன்னணி நிறுவனங்கள் இது குறித்து மௌனம் காத்தாலும், மூலப்பொருட்களைப் பதுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.