பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். திருத்தணி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோ. அரியை ஆதரித்துப் பொதட்டூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடிகை கெளதமி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 520 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, பிளஸ் 2 மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மடிக்கணினிகள் இன்னும் வழங்கப்படவில்லை. இது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் செயலாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் மின்வெட்டைச் சந்தித்து வருகின்றனர். நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போதே மின்தடை ஏற்படுகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் இத்தகைய மின்வெட்டு இருந்ததா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளைத் தடுக்க இந்த அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

தமிழக நெசவாளர்களைக் காக்க வேண்டிய அரசு, பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கிறது. இதனால் நம் ஊர் நெசவாளர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மீண்டும் நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் நடிகை கௌதமி மின்வெட்டு பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே கரண்ட் கட் ஆனதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது