தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை மேற்கொள்ளவிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதே தேதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பிரசார அனுமதி வழங்கப்பட்டதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய், கடலூர் மாவட்டத்தில் நாளை பிரசாரம் மேற்கொள்வதற்காக முன்னதாகவே காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு பிரசார அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அதே நாளில் கடலூரில் பிரசாரம் செய்ய அனுமதி கோரியிருந்தார். ஒரே நாளில், ஒரே பகுதியில் இரு முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வது சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உதயநிதி ஸ்டாலினின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த முடிவைத் தொடர்ந்து, துணை முதல்வரின் கடலூர் மாவட்ட பிரசாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் மற்றுமொரு தேதியில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் புதிய வரவான தவெக இடையே பிரசார இடங்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. கடலூரில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
