திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் அதிமுக அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் எனத் தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய திமுக அரசு மின்சாரத்தை ‘ஷிப்ட்’ முறைக்கு மாற்றி விவசாயத் தொழிலையே முடக்கிவிட்டதாகக் கடுமையாகச் சாடினார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு பழையபடி 24 மணிநேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் விவசாயிகள் எந்த நேரத்திலும் பம்பு செட்டுகளை இயக்கிப் பயனடையலாம் என்றும் அவர் உறுதி அளித்தார். விவசாயிகள் மற்றும் பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து கூட்டத்தில் அனல் பறக்கச் செய்தார்.
மேலும், விவசாயப் பணிகளை எளிதாக்கும் வகையில் டிராக்டர் போன்ற நவீன உபகரணங்களை வாங்குவதற்குப் பெண்களுக்குச் சிறப்பு மானியம் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களும், பெண்களும் அதிமுக ஆட்சியின் மூலம் மீண்டும் பொற்காலத்தைக் காண்பார்கள் என அவர் ஆவேசமாகத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
