மிசோரம் மாநிலம் லாங்தலாய் மாவட்டத்தின் பங்குவா கிராமத்தை சேர்ந்த பமியங் என்ற வயதான பெண்மணி, 117வது ஆண்டில் நேற்று இயற்கை எய்தினார். 1908ஆம் ஆண்டு பிறந்த பமியங், மிசோரம் மாநிலத்தின் மிக வயதான குடிமகளாகக் கருதப்பட்டு வந்தார். அவரது குடும்பம் பல தலைமுறைகளை கொண்டதாகும். அவருக்கு 8 பிள்ளைகள், 51 பேரன்-பேத்திகள், 122 கொள்ளுப்பேர்கள் மற்றும் 22 எள்ளுப்பேர்கள் உள்ளனர்.

அந்தப் பகுதியின் மக்கள் அனைவராலும் மதிப்பும் மரியாதையும் பெற்ற பமியங், வயது மூப்பால் நேற்று தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி மிசோரம் முழுவதும் இரங்கலுக்கு காரணமாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு மாநில மக்களும் சமூகத்தினரும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துவருகின்றனர்.