ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு, உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், திருமணத்தின் மிக முக்கியமான சடங்கான ‘ஏழு சுற்றுக்கள்’ தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, மணப்பெண் திடீரென மாயமானார். மணமகன் வீட்டார் மணப்பெண்ணைத் தேடியும் அவர் கிடைக்காததால், திருமண மண்டபத்தில் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து மணமகன் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மணப்பெண் தனது நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணையில், இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மணமகன் வீட்டார் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், தலைமறைவான மணப்பெண்ணைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசித்திரமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.