தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உதவி தொகைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் தொடர்பான திட்டம் உள்ளிட்ட சுமார் 52 நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியத்தில் சுமார் 10 புள்ளி 11 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளதாகவும் அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வாரியம் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த உதவி தொகையை உயர்த்தும் நோக்கத்தில் கூடுதலாக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விபத்தால் இறந்த நலவாரிய உறுப்பினரின் குடும்பத்திற்கான நிவாரணம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாகவும், உடல் உறுப்பு செயலில் இழந்தவர்களுக்கு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாகவும், நிரந்தர குறைபாடு தவிர்த்த மருத்துவ செலவினம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நலவாரிய உறுப்பினரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.