மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆணை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது 17.04.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்னபிறவற்றுடன் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அனைத்து அரசு துறைகளும் தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் A B C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு அதில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 -இன் சட்டப்பிரிவு 34 -இல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்தவைகளாக கண்டறியப்பட்ட பணியிடங்களில் மாற்றுத்திறன் வகையினரை உரிய தகுதிகளின் அடிப்படையில், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (special recruitment drive) நடத்தி அனைத்து பணியிடங்களையும் ஓராண்டிற்குள் தெரிவு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இத்தேர்வில் ஏற்கனவே அரசின் பல்வேறு துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் தளர்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் காலி பணியிடங்களை அந்தந்த துறைகளில் தலைவர்கள் மூலம் நிரப்பிக் கொள்ளும் வகையில், அரசாணை (நிலை) எண்.151, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்ட (சந4)த் துறை, நாள் 16.10.2008 -னை செயல்படுத்தும் விதமாக அனைத்து துறைகளும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசாணை வெளியிட ஆவண செய்யுமாறும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்துதல் தொடர்பான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பின்வருமாறு ஆணை வெளியிடுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-இன் பிரிவு 27(b)மற்றும் உட்பிரிவு (bbb)- யில் வரையறுக்கப்பட்டுள்ளதற்கிணங்க அனைத்து அரசு துறைகளிலும் உள்ள A,B,C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை அரசின் அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளில் விதிகளுக்கு உட்பட்டு வயதுவரம்பு மற்றும் தேர்வு விதிகளில் ஒருமுறை மட்டுமே தளர்வுகள் வழங்கி அக்காலி பணியிடங்களை அந்தந்த துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து இப்பணிகளின் காலாண்டு முன்னேற்ற அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார். இவ்வானை மனிதவள மேலாண்மை துறையின் அலுவல் சாரா எண்.5221677/எஸ் 2/2023,   நாள் 24/7/2023 பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.