மகாராஷ்டிர அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘லாட்கி பெஹன் யோஜனா’ திட்டம், வருட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுக்குள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது அதே திட்டத்தில் 14,298 ஆண்கள் பெண்களாகத் தங்களை பதிவு செய்து ரூ.21.44 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது திட்டம் தொடங்கிய 10 மாதங்களுக்குப் பின் அரசுக்கு தெரியவந்துள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை (WCD) நடத்திய கண்காணிப்பு ஆய்வில், திட்டம் முறையாக செயல்படவில்லை என்பது தெரியவந்தது. ஒரே குடும்பத்தில் இருந்து அதிகபட்சம் 2 பெண்கள் மட்டுமே திட்டத்திற்குப் பயனாளிகளாக இருக்கலாம் என்ற விதிமுறையை மீறி, 7.97 லட்சம் பெண்கள் மூன்றாவது உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மட்டும் ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், 65 வயதைக் கடந்த 2.87 லட்சம் பெண்களும், நிபந்தனைகளை மீறி திட்டத்தில் பதிவு செய்து ரூ.431.7 கோடி பெறக்கூடிய வகையில் திட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். அதோடு, 4-வீலர் வாகனம் வைத்திருக்கும் 1.62 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதி இல்லாதவர்களாக இருப்பதைத் திட்ட பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. இது திட்டத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில், துணை முதல்வர் அஜித் பவார், மோசடிக்குப் பங்கேற்றவர்களிடம் பணம் மீட்கப்படும் என்றும், ஒத்துழைப்பு இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
NCP எம்.பி. சுப்ரியா சூலே, “இது ஒரு பெரிய சூழ்ச்சி. ஆண்கள் எப்படி பதிவு செய்தார்கள்? எந்த நிறுவனம் பதிவு பொறுப்பேற்றது?” எனக் கேள்வி எழுப்பி, SIT அல்லது ED விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். தற்போது, 26.34 லட்சம் பேர் தகுதி இல்லாதவர்கள் என நிரூபிக்கப்பட்டதால், ஜூன் 2025-ஆம் மாதத்திற்கான நிதி வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
