விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மாணவனை கத்தியால் குத்தி விட்டு செல்போன் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த பள்ளி மாணவி மற்றும் மாணவன் தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விழுப்புரம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.