கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தமாம்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, பள்ளியில் காலை உணவு திட்ட பொறுப்பாளர் பணிக்காக வேறொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வந்தது. அந்த பணிக்கு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் பள்ளிக்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் இது போன்ற காரணங்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது.

எனவே அனைத்து பள்ளி மாணவர்களையும் உடனடியாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்தனர். இதனால் மதியத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.