மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்துபட்டி அருகே பாண்டியன் நகரில் மாற்றுதிறனாளியான பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அன்னலட்சுமி, முத்து பெருமாயி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் அன்னலட்சுமி நர்சிங் படித்து வருகிறார். முத்து பெருமாள் டெய்லரிங் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்படும் பெருமாயி மற்றும் மகள்களின் படிப்புக்கு போதிய பணம் இல்லாமல் பாலுசாமியின் குடும்பத்தினர் வறுமையில் வாடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பால்சாமி பேனா, பென்சில் விற்பனை செய்து வந்துள்ளார். தற்போது பாலசாமி எடை இயந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடை பார்க்க வரும் பெரியவர்கள் ஐந்து ரூபாயும், சிறியவர்கள் இரண்டு ரூபாயும் கொடுத்து செல்கின்றனர். இது குறித்து பால்சாமி கூறியதாவது, தமிழக அரசு எனக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்குகிறது. அரசு வழங்கிய இலவச பயண அட்டையை பயன்படுத்தி வெளியூர்களுக்கு சென்று எடை இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கிடைக்கும். இந்த வருமானம் போதுமானதாக இல்லை. எனது குடும்பம் வறுமையில் வாழ்வதால் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை வைப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.