டெக்சாஸ் மாநிலம் சான் அன்டோனியோவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், அதர்வா வியாஸ் (24) என்ற இந்திய இளைஞர், ஒரு பெண்ணையும் அவரது 3 வயது மகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்ட அந்த நபர், கீழே விழுந்த குழந்தையை கடித்துக் குதறியதில், அந்தக் குழந்தையின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் பற்களும் உதிர்ந்தன. இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாகத் தலையிட்டு அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் தற்போது மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விசாரணையில், அதர்வா வியாஸ் கடந்த 2023-ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றது தெரியவந்தது. ஆனால், ஏற்கனவே ஒரு குற்றவழக்கில் சிக்கியதால் 2025-லேயே அவரது விசா ரத்து செய்யப்பட்ட போதிலும், அவர் சட்டவிரோதமாக அங்கேயே தங்கியிருந்துள்ளார்.

தற்போது அவர் மீது குழந்தையைத் துன்புறுத்துதல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரீத தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இந்த வழக்குப் முடிந்த பிறகு அவர் நாடு கடத்தப்படுவார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.