நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு மேபீல்ட் எஸ்டேட்டில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீட்டிற்கு திரும்பியது. ஆனால் ஒரு காளை மாடு மட்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ராஜு பல இடங்களில் மாட்டை தேடி பார்த்தார். நேற்று காலை அந்த பகுதியில் கடித்து குதரப்பட்ட நிலையில் மாடு இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரும் கால்நடை டாக்டரும் மாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். புலி தாக்கியதால் தான் மாடு இறந்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.