சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் போர்வையைப் பாதுகாக்கவும், மரங்களை அத்துமீறி அகற்றுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரங்களின் கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளைத் தொங்கவிடுதல் மற்றும் மரங்களைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அதிரடி நடவடிக்கை சென்னையின் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மரங்கள் தொடர்பான சேவைகளை எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஜனவரி 12-ம் தேதி முதல் புதிய ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இனி மரக்கிளைகளை அகற்றவோ அல்லது காய்ந்த மரங்களை அகற்றவோ மாநகராட்சி இணையதளம் அல்லது ‘நம்ம சென்னை’ செயலி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதனால் மாவட்ட பசுமைக் குழுவின் ஒப்புதலோடு இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வனத்துறைக்கு நேரடியாகச் செல்லும் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு, பசுமைப் பாதுகாப்புப் பணிகள் மேலும் வலுவடையும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.