மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் மல்லியக்கொள்ளை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக அரசு பேருந்து டிரைவர் பேருந்தை சற்று திருப்பினார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட பத்துவர் லேசாக காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று 10 பேரும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.